Wednesday, May 23, 2007

ஈ கலப்பை ஜெ.

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.

ரொம்ப நாளா எனக்கும் இந்த பதிவை தமிழில் எழுத ஆசை தான். ஆனா எப்படி தொடங்குவது, தமிழ் எழுத்துரு எங்கிருந்து கொண்டு வருவது என்று பெரும் போராட்டம். தினமும் தவறாமல் தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் போய் படிப்பது உண்டு, பின்னூட்டமிடவும் ஆசை தான், வழக்கம் போல் தமிழ் எழுத்துரு தான் கிடைக்காமல் ஏக குழப்பம். முரசு அஞ்சல் தெரியும் இருந்தாலும் அதில் தட்டச்சு செய்து ப்ளாக்கில் கொண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை. அப்போது இ கலப்பை பற்றி தெரிந்து கொண்டேன், 2 நாளா வலையில் தேடி தரவிறக்கம் செய்து இப்போது தான் உபயோகிக்க கற்றுக்கொண்டேன்.(நன்றி தமிழா.காம்)

பதிவில் விரும்பி படிப்பது சென்னை கச்சேரி காரணம் எனது முதல் பின்னூட்டம் வந்தது அதில் தான், அது முதலே பேராசை தான் நாமும் தேவ் போல் பட்டய கிளப்பற பதிவை போடாமல் போக கூடாது என்று. நினைப்பது போல் நடந்து விட்டால் வேற என்ன விறுவிறுப்பு இருக்கு. தினமும் வலைப்பதிவு படிக்கிறது தான் நம்மால் முடியும் போலிருக்குனு நினைச்சிட்டு இருந்தேன்.

பதிவு சம்பந்தமாய் ஏதாவது புத்தகம் தான் படிக்கணும்னு நினைச்சுட்டு இதில் 30 நாட்களில் ப்ளாக் எழுதுவது எப்படினு புத்தகம் ஏதாவது இருக்கானு பார்த்தா ஏதும் தென்படலை (மணிமேகலை பிரசுரம் கவனிக்கவும்) சரி நாம் தான் எல்லா பதிவும் படிக்கிறோமே இதிலிருந்தே கற்றுக்கொள்வோம் என்று இறங்கியாற்று.

இனி சுகுணா திவாகர் பதிவு போல் வார்ப்புருவும், செந்தழழ் ரவி போல் நிறைய பின்னூட்டமும், ஓசை செல்லா போல் நிறைய செய்திகளும், திரும்பிப்பார் போல் அனுபவங்களும், பங்கு வர்த்தகம் போல் பங்கு நிலவரத்தையும் கலந்து கொடுக்க ஆசை நிறைய உண்டு. இந்த சோதனை பதிவு சரியாக வெளிவந்தால் முயற்சி தொடரும். இல்லையென்றால் திரும்பவும் பதிவு தான்.

தமிழ்மணத்தில் இடுகை தெரிய வேண்டுமென்றால் குறைந்தது 3 பதிவு இருக்கவேண்டுமாம். அதற்காகவாது 3 பதிவை போட்டே ஆக வேண்டிய கட்டாயம். அடுத்த பதிவுக்கு இப்பொழுதே யோசிக்க வேண்டும். பார்ப்போம் பின்னோட்டம் ஒண்ணும் வரலைன்னா பதிவு யாருக்கும் பிடிக்கைலைன்னு தெரிஞ்சுட போகுது. அதை வெச்சே அடுத்த பதிவை ஓட்டிட வேண்டியது தான்.